சிவபெருமானது திருக்கரத்தில் மழு முதலான ஆயுதங்கள் எப்படி வந்தது தெரியுமா
தாரகவனத்தில் வசித்து வந்த முனிவர்களுக்கு, கடவுளை விடவும் தாங்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் வந்து விட்டது. தவத்தில் தாங்களே சிறந்தவர்களென்றும், தங்கள் மனைவியாகிய பத்தினி பெண்களின் கற்பே உயர்ந்ததென்றும் அவர்கள் கர்வம் கொண்டிருந்தனர். அந்த கர்வத்தின் காரணமாக, அவர்கள் கடவுளை நினைக்க மறந்து போனார்கள்; மதிக்க மறந்து போனார்கள்.
மன மயக்கம் அடைந்த முனிவர்களின் கர்வத்தை அகற்ற எண்ணினார் சிவபெருமான். எனவே அவர் திருமாலை மோகினி அவதாரம் எடுக்கச் செய்து, முனிவர்கள் தவம் செய்யும் தாருகா வனத்திற்கு அனுப்பி வைத்தார். அதேபோல் சிவபெருமானும் பிச்சாடனர் வடிவம் கொண்டு, முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார்.
மோகினி வடிவம் கொண்ட திருமால், தாருகா வனத்து முனிவர்கள் தவம் செய்யும் இடத்திற்கு சென்று முனிவர்களின் தவத்தையும், அவர்களின் உயர்வையும் கெடுத்தார். மோகினியின் அழகில் மயங்கிய முனிவர்கள் தன்னிலை மறந்தனர். இதே வண்ணம் முனிவர்களின் குடில்களுக்குச் சென்ற பிச்சாடனர், அங்குள்ள பெண்களிடம் யாசகம் கேட்டு நின்றார். அவரது அழகில் மயங்கிய முனிவர்களின் மனைவிகள், சிவபெருமானின் பின்னாலேயே செல்லத் தொடங்கினார்கள். தாங்கள் வந்த வேலை முடிந்ததும், சிவ பெருமானும், திருமாலும் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிச் சென்றனர்.
இந்த நிலையில் மயக்கம் தெளிந்த முனிவர்கள், தங்கள் மனைவிமார் அந்தணர் ஒருவரைப் பார்த்து மனம் மயங்கியதை எண்ணி கடும் கோபம் கொண்டனர். நடந்த செயல்கள் அனைத்துக்கும் சிவபெருமானே காரணம் என்பதையும் அவர்கள் அறிந்து கொண்டார்கள். இதனால் பிரபஞ்சம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும், மகேஸ்வரரை தண்டிக்க தாருகாவன முனிவர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி விஷ விருட்சங்களை, யாகப் பொருட் களாக்கி, வேம்பு, நெய் போன்றவற்றை தீயிலிட்டு வேள்வி ஒன்றை செய்தனர். அந்த வேள்வியில் இருந்து பல மழு முதலான ஆயுதங்கள் தோன்றின. அந்த ஆயுதங்களை, ஈசனை அழித்துவரும்படி ஏவிவிட்டனர்.
சிவச்சுடரான ஈசன் அந்த ஆயுதங்களை உடை, சிலம்பு, ஆடை, ஆயுதம், மாலை, சேனை என மாற்றி தன்வசம் வைத்துக் கொண்டார். மாயைகளில் சிறந்தவன் இந்த சிவன் என்று எண்ணினர் முனிவர்கள். அவர்களின் கோபம் முன்னிலும் பல மடங்காகப் பெருகியது. தாங்கள் அனுப்பிய அனைத்து ஆயுதங்களையும், சிவபெருமான் தன் வசமாக்கிக் கொண்டதையடுத்து, யாக அக்னியில் இருந்து எழுந்த சர்ப்பங்களை, மகேஸ்வரனின் மீது பாயும்படி கட்டளையிட்டனர்.
அந்த நாகங்கள் உலகமே அதிரும்படி அச்சுறுத்தும் தன்மையுடன் அதிவேகமாக சிவபெருமானை நோக்கி விரைந்து சென்றன. நாகங்களின் நச்சுப் பற்களில் விஷம் சொரிந்தபடி இருந்தது. நெற்றிக் கண்ணில் நெருப்பை அடக்கி வைத்திருக்கும் ஈசன், ஆதிகாலத்தில் கருடனுக்கு பயந்து தன்னிடம் சரண்புகுந்த சர்ப்பங்களைத் தாங்கியிருந்ததுடன், தற்போது தன்னை நோக்கி வந்த பாம்புகளையும் ஏற்றுக்கொண்டார்.
அந்த பாம்புகளை ‘உமது குலத்தாருடன் ஒன்று கூடி வாழுங்கள்’ என்று கூறி தன் கரத்தால் பற்றி திருக் கரம், திருவடி, திருவரை, திருமார்பு முதலிய இடங்களில் கங்கணம், காலணி, அரைஞான் முதலிய ஆபரணங்களாக அணிந்து கொண்டார். பரமனின் அடி புகுந்த பாம்புகள் அனைத்தும் தங்கள் நிலை உயர்ந்ததை எண்ணி மகிழ்வுடன் சிவபெருமானை வேண்டி துதித்து போற்றின.
தங்களின் சக்தி அனைத்தும் வீணாகப்போனதை எண்ணி தாருகா வனத்து முனிவர்கள் வெட்கித் தலைகுனிந்தனர். சிவபெருமானே உலகத்தில் முதன்மையானவர் என்பதை அவர்கள் உணர்ந்தனர்.
No comments:
Post a Comment