சிவத்திரு
வேலுப்பிள்ளை தர்மலிங்கம் ஐயா அவர்களால்
அருள்மிகு செருக்கன் குளக்கட்டு விநாயகர் மீது பாடப்பெற்ற பா..
குளக்கட்டு விநாயகர் பாமாலை
திருச்சிற்றம்பலம்
01
சீரோங்கு பயறிபா வட்டைகருங் காலியொடு
சீறிவளர் கள்ளி முதிரை
பேரோங்க மேவிவளர் நெடியமூக் கன்காட்டின்
தென்பால் விளங்கு பதியாம்
காராளர் சீரான கமவேலை செய்தோங்க
கருத்தோடு கோயில் கொண்ட
நீரேறு குஞ்சுப் பரந்தனுறை கரிமுகா
நிழல்சேர் குளக் கட்டனே.
02
கெண்டையொடு கண்ணியும் கிளரும் வரால்களும்
கண்டவுட னோடி யொழிய
பண்டைமர பானபசு மாடும் கிடாக்களும்
பசிதீர்ந்து வந்தருந்த
முண்டகமு மல்லியும் மொட்டோடு பூவாக
மூடித் திரை விரிக்க
கண்டோர்கள் குட்டிக் கலக்கமறு கையனே
காவாய் குளக் கட்டனே.
03
பரமரொடு வேலரும் பொன்னம்ப லத்தாரும்
பாங்கி னொடு கோயில் ஆக்கி
புரமெரித் தோன்மகன் பூசையு ரிமைத்திறன்
பொன்னருக் கீந்து பேண
விரவுபெரு நிலமெலாம் நெல்விளைந் தேற்றமுற
வேண்டுமருள் ஈந்த கோவே
அரவை யரையிற்தரித் தெமையாழு மைங்கரா
அருள்சேர் குளக் கட்டனே.
04
திருவான கல்வியும் திறலான தேகமும்
தீமை யணுகாத வுணர்வும்
கருகாத செல்வமும் கதிசேர் தவங்களும்
கருதிவளர் நன் மக்களும்
குருவோடு பூசையும் நிறை வேத வோசையும்
குறையாம லீயு மையா
மருதோடு சேருகுள மேட்டினுறை கற்பகா
மருள்தீர் குளக் கட்டனே.
05
அன்னையோடு தம்பியும் அருகா யிருந்திட
அம்மான் படுக்கை பக்கல்
முன்னருறு வடுகனின் முறையான காப்பினில்
மூஷிகத் தோடு அமர்வாய்
சன்னிதியில் வந்தவர் சலிப்பெலாம் போக்கியிடு
சாந்த சற்க்குண சொரூபி
தன்னிக ரிலாதவொரு தந்திமுகத் தைங்கரா
தங்குபுகழ் குளக் கட்டனே
06
பேசரு கணங்களின் பிரதான தளபதி
பிழை நீக்கி எனையா ளுவாய்
பூசனை புரிந்துவரு நேசமுடை யடியார்கள்
புகழொடு வாழ வழிசெய்
ஈசனோடு தேவிமகிழ் இனியசற் புத்திரா
இனிதான வரம ருளுவாய்
வாசவன் மருமகனே வளமான நற்குடா
தறைசேர் குளக் கட்டனே.
07
அப்பமொடு மோதகம் அடைகொழுக் கட்டையும்
ஆனபணி யார முதலாய்
செப்பனிடு மவல்கடலை சீரான கற்கண்டு
செம்மையுறு முக் கனிகளும்
எப்பொழுது மேற்றுமிக வினிதாக வீற்றிடும்
ஏரம்ப மூர்த்தி நீயே
தப்பாம லுனதுமல ரடியினை துதிக்கின்றேன்
தளிசேர் குளக் கட்டனே.
08
உத்தர திசைகணுறு வீரபத் திரனோடு
உதவிடு முன் ணண்ணமாரும்
நித்தமுறு மடியார்கள் நின்று வழிபட்டிடும்
நிழல்சே ரடப்ப மோட்டை
அத்தனின் தேவியுறை ௮ழகான கோயிலும்
ஆனதென்திசை யிருக்க
கொண்டலியா னோடுசங் கரவயல் சூழவாழ்
கோவே குளக் கட்டனே.
09
நித்தியப் பூசையோடு நிகரில்சிவ ராத்திரி
நீடுபுகழ் நவ ராத்திரி
பத்தியொடு பாடல்பயில் பாவையற் குற்றதிரு
வெம்பாவை பத்து நாளும்
சித்திதரு காலமென சேவித்து வேண்டியிட
செல்வமுழு தீயு மிறைவா
புத்தியொடு சித்தியும் பக்கலிலி ருப்பவருள்
பதிசேர் குளக் கட்டனே
10
திணைப்புனத் தமர்ந்த வள்ளி திரும்பிய தன்மைக்கண்டு
திறலோடு வேழமாகி திருமணம் முடிப்பாய் போற்றி
அனைத்துல கப்பனம்மை அவருளே அடங்கு மென்று
அரைநொடி சுற்றி வந்து அப்பழம் பெற்றாய் போற்றி
நினைத்தொழு மடியார் நெஞ்சில் வஞ்சனை நீக்கி என்றும்
நிறைவுறு வெற்றி சேர்க்கும் நிர்மலா போற்றி போற்றி
வினைத்தொட ரறுத்து வெய்ய பிறவியை முடிக்கும் தூய
குளக் கட்டா போற்றி போற்றி
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment