திருக்கோவையார்
களவியல்
முதல் அதிகாரம்
கட்டளைக் கலித்துறை யாப்பு
திருச்சிற்றம்பலம்
விநாயகர் வணக்கம்
எண்ணிறைந்த திங்கள் எழுகோ புரந்திகழக்
கண்ணிறைந்து நின்றருளும்/கற்பகமே - நண்ணியசீர்த்
தேனூறு செஞ்சொல் திருக்கோவை என்கின்ற
நானூறும் என்மனத்தே நல்கு 1
நூற்சிறப்பு்முதல் அதிகாரம்
ஆரணங் காணென்பர் அந்தணர்; யோகியர் ஆகமத்தின்
காரணங் காணென்பர்; காமுகர் காமநன் னூலதென்பர்;
ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்;
சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே. 2
1. இயற்கைப் புணர்ச்சி
1. காட்சி்
திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண்டு ஓங்குதெய்வ
மருவளர் மாலையர் வல்லியின் ஒல்கி அனநடை வாய்ந்து
உருவளர் காமன்தன் வென்றிக் கொடிபோன்று ஒளிர்கின்றதே. 1
கொளு
மதிவாணுதல் வளர்வஞ்சியைக்
கதிர் வேலவன் கண்ணுற்றது
2. ஐயம்
போதா விசும்போ புனலோ பணிக ளதுபதியோ
யாதோ அறிகுவ(து) ஏதும் அரிதி யமன்விடுத்த
தூதோ அனங்கன் துணையோ இணையிலி தொல்லைத்தில்லை
மாதோ மடமயி லோஎன நின்றவர் வாழ்பதியே. 2
கொளு
தெரியஅரியதோர் தெய்வமன்ன
அருவரைநாடன் ஐயுற்றது.
3. தெளிதல்
பாயும் விடையரன் தில்லையன் னாள்படைக் கண்ணிமைக்கும்
தோயும் நிலத்தடி தூமலர் வாடும் துயரமெய்தி
ஆயும் மனனே அணங்கல்லள் அம்மா முலைசுமந்து
தேயும் மருங்குல் பெரும்பணைத் தோளிச் சிறுநுதலே. 3
கொளு
அணங்கல்லள்என்(று) அயில்வேலவன்
குணங்களை நோக்கிக் குறித்துரைத்தது.
4. நயப்பு
அகல்கின்ற அல்குல் தடமது கொங்கை அவைஅலம்நீ
புகல்கின்ற(து) என்னைநெஞ்(சு) உண்டே இடைஅடை யார்புரங்கள்
இகல்குன்ற வில்லில்செற் றோன்தில்லை ஈசன்எம் மான்எதிர்த்த
பகல்குன்றப் பல்உகுத் தோன்பழ னம்அன்ன பல்வளைக்கே. 4
கொளு
வண்டமர் புரிகுழல் ஒண்டொடி மடந்தையை
நயந்த அண்ணல் வியந்துள் ளியது.
5. உட்கோள்
அணியும் அமிழ்தும்என் ஆவியம் ஆயவன் தில்லைச்சிந்தா
மணிஉம்ப ரார்அறி யாமறை யோன்அடி வாழ்த்தலரின்
பிணியும் அதற்கு மருந்தும் பிறழப் பிறழமின்னும்
பணியும் புரைமருங் குல்பெருந் தோளி படைக்கண்களே. 5
கொளு
இறைதிருக் கரத்து மறிமான் நோக்கி
உள்ளக்கருத்து வள்ளல் அறிந்தது.
6. தெய்வத்தை மகிழ்தல்
வளைபயில் கீழ்கடல் நின்றிட மேல்கடல் வான்நுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத் தில்லைத்தொல் லோன்கயிலைக்
கிளைவயின் நீக்கிஇக் கொண்டைஅங் கண்ணியைக் கொண்டுதந்த
விளைவயல் வால்விய வேன்நய வேன்தெய்வம் மிக்கனவே. 6
கொளு
அன்ன மென்னடை அரிவையைத் தந்த
மன்னிருந் தெய்வத்தை மகிழ்ந்து ரைத்தது.
7. புணர்ச்சி துணிதல்
ஏழுடை யான்பொழில் எட்டுடை யான்புயம் என்னைமுன்ஆள்
ஊழுடை யான்புலி யூர்அன்ன பொன்இவ் உயிர்பொழில் ஆகச்
சூழுடை ஆயத்தை நீக்கும் விதிதுணை யாமனனே
யாழுடை யார்மணம் காண்அணங்(கு) ஆய்வந்(து) அகப்பட்டதே. 7
கொளு
கொவ்வைச் செவ்வாய்க் கொடியிடைப் பேதையைத்
தெய்வப் புணர்ச்சி செம்மல் துணிந்தது.
8. கல்வியுரைத்தல்
சொற்பால் அழுதிவள் யான்சுவை என்னத் துணிந்திங்ஙனே
நற்பால் வினைத்தெய்வம் தந்தின்று நானிவ ளாம்பகுதிப்
பொற்பார் அறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில்வெற்பில்
கற்பா வியவரை வாய்க்கடி(து) ஓட்ட களவகத்தே. 8
கொளு
கொலைவேலவன் கொடியிடையடு
கலவியன்பம் கட்டுரைத்தது
9. இருவயின் ஒத்தல்
உணர்ந்தார்க்(கு) உணர்வரி யோன்தில்லைச் சிற்றம் பலத்தொருத்தன்
குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ் வாயிக் கொடியிடைதோள்
புணர்ந்தால் புணரும் தொறும்பெரும் போகம்பின் னும்புதிதாய்
மணந்தாழ் புரிகுழ லாள் அல்குல் போல வளர்கின்றதே. 9
கொளு
ஆராஇன்பத்து அன்புமீதூர
வாரார்முல்லை மகிழ்ந்துரைத்தது.
10. கிளவி வேட்டல்
அளவியை யார்க்கும் அறி(வு )அரி யோன்தில்லை அம்பலம்போல்
வளவிய வான்கொங்கை வாள்தடங் கண்நுதல் மாமதியின்
பிள(வு)இயல் மின்இடை பேரமை தோளிது பெற்றியென்றால்
கிளவியை யென்றோ இனிக்கிள்ளை யார்வாயிற் கேட்கின்றதே. 10
கொளு
அன்னம்அன்னவள் அவயவம் கண்டு
மென்மொழி கேட்க விருப்புற்றது.
11. நலம் புனைந்துரைத்தல்
கூம்பலங் கைத்தலத்து அன்பர்என்(பு) ஊடுரு கக்குனிக்கும்
பாம்பலங் காரப் பரன்தில்லை அம்பலம் பாடலரின்
தேம்பலம் சிற்றிடை ஈங்கிவள் தீங்கனி வாய்கமழும்
ஆம்பலம் போதுள வோஅளி காள்நும் அகன்பணையே. 11
கொளு
பொங்கிழையைப் புனைநலம் புகழ்ந்(து)
அங்கதிர்வேலோன் அயர்வுநீங்கியது.
12. பிரிவுணர்த்தல்
சிந்தா மணிதெள் கடல்அமிர் தம்தில்லை யான்அருளால்
வந்தால் இகழப் படுமே மடமான் விழிமயிலே
அந்தா மரையன்ன மேநின்னை யான் அகன்(று) ஆற்றுவனோ
சிந்தா குலமுற்றென் னோஎன்னை வாட்டம் திருத்துவதே. 12
கொளு
பணிவரல்அல்குலைப் பயிர்ப்புறுத்திப்
பிணிமலர்த் தாரோன் பிரிவுணர்த்தியது.
13. பருவரல் அறிதல்
கோங்கின் பொலிஅரும்(பு) ஏய்கொங்கை பங்கன் குறுகலர்ஊர்
தீங்கில் புகச்செற்ற கொற்றவன் சிற்றம் பலம் அனையாள்
நீங்கின் புணர்(வு)அரி(து) என்றோ நெடி(து)இங்ங னேயிருந்தால்
ஆங்குஇற் பழியாம் எனவோ அறியேன் அயர்கின்றதே. 13
கொளு
பிரிவுணர்ந்த பெண்கொடி தன்
பருவரலின் பரிசு நினைந்தது.
14. அருட்குணம் உரைத்தல்
தேவரில் பெற்றநம் செல்வக் கடிவடி வால்திருவே
யாவரின் பெற்றினி யார்சிதைப் பார்இமை யாதமுக்கண்
மூவரின் பெற்றவர் சிற்றம் பலம்அணி மொய்பொழில்வாய்ப்
பூஅரில் பெற்ற குழலிஎன் வாடிப் புலம்புவதே. 14
கொளு
கூட்டிய தெய்வத் தின்அ ருட்குணம்
வாட்டம் இன்மை வள்ளல் உரைத்தது.
15. இடம் அணித்துக் கூறி வற்புறுத்தல்
வருங்குன்றம் ஒன்றுரித் தோன்தில்லை அம்பல வன்மலயத்(து)
இருங்குன்ற வாணர் இளங்கொடி யேஇடர் எய்தல்எம்மூர்ப்
பருங்குன்ற மாளிகை நுண்கள பத்தொளி பாயநும்மூர்க்
கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுகம் ஏய்க்கும் களங்குழையே. 15
கொளு
மடவரலை வற்புறுத்தி
இடமணித்துஎன்று அவன்இயம்பியது.
16. ஆடு இடத்து உய்த்தல்
தெளிவளர் வான்சிலை செங்கனி வெண்முத்தம், திங்களின்வாய்ந்(து)
அளிவளர் வல்லிஅன் னாய் முன்னி யாடுபின் யான்அளவா
ஒளிவளர் தில்லை ஒருவன் கயிலை யுகுபெருந்தேன்
துளிவளர் சாரல் கரந்துங்ங னேவந்து தோன்றுவனே. 16
கொளு
வன்புறையின் வற்புறுத்தி
அன்புறு மொழியை அருகு அகன்றது.
17. அருமை அறிதல்
புணர்ப்போன் நிலனும் விசும்பும் பொருப்புந்தன் பூங்கழலின்
துணர்ப்போ தெனக்கணி யாக்குந்தொல் லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
இணர்ப்போ(து) அணிசூழல் ஏழைதன் நீர்மைஇந் நீர்மையென்றால்
புணர்ப்போ கனவோ பிறிதோ அறியேன் புகுந்ததுவே. 17
கொளு
கற்றமும் இடனும் சூழலும் நோக்கி
மற்றவன் அருமை மன்னன் அறிந்தது.
18. பாங்கியை அறிதல்
உயிரொன்(று) உளமும்ஒன்(று) ஒன்றே சிறப்(பு)இவட்(கு) என்னோடென்னப்
பயில்கின்ற சென்று செவியுற நீள்படைக் கண்கள்விண்வாய்ச்
செயிர்ஒன்று முப்புரம் செற்றவன் தில்லைச்சிற் றம்பலத்துப்
பயில்கின்ற கூத்தன் அருளென லாகும் பணிமொழிக்கே. 18
கொளு
கடல்புரை ஆயத்துக் காதல் தோழியை
மடவரல் காட்ட மன்னன் அறிந்தது.
இயற்கைப் புணர்ச்சி முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment