பிரதோஷம்
பிரதோஷம்,
அத்தமனத்திற்கு முன்னும் பின்னுமுள்ள மூன்றே முக்கால் நாழிகை
சிவபிரானை வழிபடுதற்குரியதாய்க் கிருஷ்ணத்திரயோதசி கூடியதான மாலைக்காலம்...
பிரதோஷ மகிமை மகாபாரதப் போருக்கு முன் ஒரு காட்சி ....
தருமன் தன் சகோதரர்கள் பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோருடன் அமர்ந்திருக்கிறான். கிருஷ்ணனும் ஏதோ நினைத்தபடியே இங்கும் அங்கும் உலாவிக்கொண்டு இருக்கிறான். “போரில் பாண்டவர்கள் வெற்றி பெற என்ன செய்யலாம்? என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அவன், இப்பொழுது சகாதேவன் பக்கம் திரும்பி, அவனை மட்டும் தனியே அழைக்கிறான். சோதிட சாத்திரத்தைக் கசடறக்கற்றவன் சகாதேவன். இதை பூரணமாக அறிந்தவன் கிருஷ்ணன். கிருஷ்ணனுடைய அவதார நோக்கத்தையும், அவன் நடத்தப்போகும் நாடகங்களையும் நன்கு அறிந்தவன் சகாதேவன். அழைபிற்கிணங்கி கிருஷ்ணனிடம் வருகிறான். கிருஷ்ணனும் அவனை ஒரு தனியிடத்திற்கு அழைத்துச் செல்கிறான்.
கிருஷ்ணன்: “சகாதேவா! நியாயமான போட்டியில் வெற்றி காண்பதற்குச் சோதிட ரீதியாக ஒரு வழி சொல்வாயா?
சகாதேவன்: “கண்ணா!! நீ என்ன கேட்கிறாய் என்று எனக்குத் தெரியும். நடக்கப்போகும் பாரதப்போரில் வெற்றி பெற வழி கேட்கிறாய். ‘நியாயமான போட்டி’ என்று புரட்டுகிறாய். எல்லாம் தெரித்தவன் ‘நீ’. அமாவாசை நாளையே மாற்றியவன் ‘நீ’. ஒன்றும் அறியாதவனைப்போல் கேட்டு, என்னை ஏமாற்றுகிறாயே!
கிருஷ்ணன்: அப்படியில்லை, சகாதேவா! என்ன இருந்தாலும் சோதிடக் கலையைக் கசடறக் கற்று, பாரபட்சமின்றி, வணங்கிக் கேட்பவர்களுக்கு வாரித் தருபவன் நீ. அடியேனும் இப்போது உன்னை வணங்கித்தான் கேட்கிறேன். பதில் கிடைக்குமா, கிடைக்காதா?
சகாதேவன்: (கண்ணை மூடி, தீவிரமாக யோசித்து விட்டு) திருமால் மத்தளம் கொட்டுவான். அந்த நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய். நியாயமான போரில் வெற்றி பெறுவாய்.
கிருஷ்ணன்: என்ன! திருமால் மத்தளம் கொட்டினானா? என்ன உளறுகிறாய்? (குறும்புச் சிரிப்பை உதிர்க்கிறான்.)
சகாதேவன்: கிருஷ்ணா! உத்தம வழிபாட்டிற்குரிய தெய்வம் நீ....... இருந்தாலும், நீயே செய்ய வேண்டிய அதி உத்தம வழிபாடு ஒன்று உண்டு, அந்த வழிபாட்டில் திருமால் தவறாது மத்தளம் கொட்டுவார். அதைத்தான் சொன்னேன்!
கிருஷ்ணன்: சகாதேவா.... ஆர்வத்தைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறாயே! அந்த அதிஉத்தம வழிபாடுயாது?
சகாதேவன்: கிருஷ்ணா.... அனைத்தையும் அறிந்தவன் 'நீ'. இருந்தாலும் மக்களுக்காகக் கேட்கிறாய்! சொல்கிறேன், 'பிரதோஷம்' என்று ஒரு அதி உத்தம வழிபாடு உண்டு. அதில் எம்பெருமானாகிய சந்திரசேகரமூர்த்தியும் அம்பிகையும் நந்தி வாகனத்திலமர்ந்து பவனி வருவர், அதையே 'பிரதக்ஷிணம்' என்றும் சொல்வர். பிரதக்ஷிணத்தில் பலவகை உண்டு, அதில் உத்தமமானது 'சோமசூக்த பிரதக்ஷிணம்' என்பது, அந்த சோமசூக்த பிரதக்ஷினத்தில் ஈசன் வாகனத்தில் ஈசான்ய மூலைக்கு வரும்போது மஹா தூப தீப ஆராதனைகள் நடக்கும். அதை குருவருளால் முறையாக தரிசனம் செய்தால் முறையான போட்டியில் தவறாமல் வெற்றி கொள்ளலாம். மேலும் அந்த உத்தம வழிபாட்டின்போதுதான் திருமால் திருக்கைலாயத்தில் ஈசனுடைய நாட்டியத்திற்கு அற்புதமாக மத்தளம் கொட்டுகிறான்...
பிரதோஷ வழிபாட்டு மகிமைகளில் மூழ்கிய நிலையில் கிருஷ்ணன் தன் குரு உத்தம சாந்திபீனியிடம் வருகிறான்..... உத்தம குருவும் தன் சீடனுடைய உள்ளத்தை அறிந்து, அவனுக்கு சிவலீலைத் தத்துவங்களைப் பக்குவமாக உபதேசிக்கிறார். அதிலிருந்து பிறந்தது பிரதோஷ வழிபாட்டின் மகிமையும், பெருமையும்.... மக்கள் உணர்ந்து உய்யவே !
இவ்வாறு அவதார மூர்த்தியாகிய கண்ணனே அலைந்து, திரிந்து பிரதோஷ வழிபாட்டின் மகிமைகளை உணர்ந்தானென்றால்... மக்களாகிய நாம் இன்றுவரை பிரதோஷ வழி பாட்டின் மகிமையை உணர்ந்தோமா? அல்லது, உணர முயற்சித்தோமா? அல்லது உணர்ந்தறிந்த உத்தமர்களைத்தான் நாடினோமா? – இல்லை. இருப்பினும் 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற பரந்த நோக்கத்துடன் புவியில் உலவி வரும், அகத்திய பீடத்தின் அழகுறச் செய்யும் தன்னிகரில்லா, அங்காள பரமேஸ்வரி அடிமை, ஸ்ரீ-ல-ஸ்ரீ வேங்கடராம சித்தர் அவர்கள் கிருஷ்ணன், சாந்திபீனியிடம் பெற்ற பிரதோஷ ரகசியங்களை, போகர் அகத்தியரிடம் கற்ற அற்புத பிரதோஷ மகிமைகளை மக்களுக்காக, மக்கள் புரிந்துகொள்ளும் வகையில், எளிமையாக,அருமையாக இங்கு அள்ளி கொடுக்கிறார்கள். மக்களாகிய நாமும் பிரதோஷ வழிபாட்டின் மகிமைகளை உணர்ந்து, பின்பற்றிப் பேரின்பம் அடைவோமாக!! ..
மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தே இருத்திக் காத்த காலவேளையே பிரதோஷ வேளை. வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாதம் இருமுறை பிரதோஷம் வரும்.
பிரதோஷத்தில் பத்து வகைகள் உள்ளன. அவையாவன,.
நித்திய பிரதோஷ விரதம் - தினமும் சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைகள் முன்னர், நட்சத்திரங்கள் உதயமாகும் வரை உள்ள நேரம் நித்திய பிரதோஷமாகும்.
திவ்ய பிரதோஷ விரதம் - பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தால் அது திவ்ய பிரதோஷம் எனப்படும்.
தீப பிரதோஷ விரதம் (மகா பிரதோஷம்) - தேய்பிறை சனிக்கிழமைகளில் வரும் மாத பிரதோஷம் மகா பிரதோஷம் அல்லது சனிப் பிரதோஷம் எனப்படும். இது மிகவும் சிறப்பானது.
சப்தரிஷி பிரதோஷ விரதம் - பிரதோஷ காலத்தில் பூஜைகளை முடித்து வானத்தில் சப்த ரிஷி மண்டலம் என்னும் நட்சத்திர கூட்டத்தை வணங்கினால் அவர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும்.
ஏகாட்ச்சர பிரதோஷ விரதம் - வருடத்தில் ஒரு முறை மட்டும் வரும் மகா பிரதோஷம் ஏகாட்ச்சர பிரதோஷம் எனப்படும்.
அர்த்தநாரி பிரதோஷ விரதம் - வருடத்தில் இரண்டு முறை மகா பிரதோஷம் வந்தால், அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர்.
திரிகரண பிரதோஷ விரதம் - வருடத்திற்கு மூன்று முறை மகா பிரதோஷம் வந்தால் அதை திரிகரண பிரதோஷம் என்பார்கள்.
பிரம்ம பிரதோஷ விரதம் - இந்த பிரதோஷத்தை கடைபிடித்தால் முன்னோர் சாபம், முன் வினை பாவம் விலகிவிடும்.
ஆட்சரப பிரதோஷ விரதம் - வருடத்தில் ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது ஆட்சரப பிரதோஷம்.
கந்த பிரதோஷ விரதம் - சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்த பிரதோஷம் என்று பெயர்.
சட்ஜ பிரபா பிரதோஷ விரதம் - வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்து அதை கடைப்பிடித்தால் பிறவி என்னும் பெரும் கடலை நீந்தி, பிறப்பில்லா பெருமையை பெறலாம்.
அஷ்டதிக் பிரதோஷ விரதம் - வருடத்தில் எட்டு மகா பிரதோஷத்தை கடைப்பிடித்தால் அஷ்டதிக் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த புகழ், செல்வாக்கு ஆகியவற்றை தருவார்கள்.
நவகிரக பிரதோஷ விரதம் - வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால் அது நவகிரக பிரதோஷமாகும்.
துத்த பிரதோஷ விரதம் - வருடத்தில் வரும் பத்து மகா பிரதோஷத்தையும் கடைபிடிப்பது துத்த பிரதோஷம் எனப்படும்.
பிரதோஷ நாட்களில் என்ன கிழமை வழிபாடு செய்தால்,
என்னனென்ன பலன்கள் கிடைக்கும்….
ஞாயிறு பிரதோஷம் – சுப மங்களத்தை தரும்
திங்கள், சோம பிரதோஷம் – நல்ல எண்ணம், நல்ல அருள் தரும்
செவ்வாய்ப்பிரதோஷம் – பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்
புதன் பிரதோஷம் – நல்ல புத்திரபாக்யம் தரும்
வியாழன் பிரதோஷம் – திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்
வெள்ளி பிரதோஷம் – எதிரிகள், எதிர்ப்பு விலகும்
சனிப்பிரதோஷம் – அனைத்து துன்பமும் விலகும்
No comments:
Post a Comment