திருக்கோவையார்
களவியல்
நான்காம் அதிகாரம்
4. மதியுடம்படுத்தல்
திருச்சிற்றம்பலம்
பேரின்பக் கிளவி
மதியுடன் படுத்தல் வரும்ஈ ரைந்தும்
குருஅறி வித்த திருவருள் அதனைச்
சிவத்துடன் கலந்து தெரிசனம் புரிதல்.
1. பாங்கிடைச் சேறல்
எளிதன்(று) இனிக்கனி வாய்வல்லி புல்லல் எழில்மதிக்கீற்(று)
ஒளிசென்ற செஞ்சடைக் கூத்தப் பிரானைஉன் னாரின்என்கண்
தெளிசென்ற வேற்கண் வருவித்த செல்லல்எல் லாம்தெளிவித்து
அளிசென்ற பூங்குழல் தோழிக்கு வாழி அறிவிப்பனே. 50
கொளு
கரந்துறை கிளவியின் காதல் தோழியை
இரந்துகுறை உறுவல்என்(று) ஏந்தல் சென்றது.
2. குறையுறத் துணிதல்
குவளைக் கருங்கண் கொடியேர் இடையிக் கொடிக்கடைக்கண்
உவளைத் தனதுயிர் என்றது தன்னோ(டு) உவமையில்லா
தவளைத்தன் பால்வைத்த சிற்றம் பலத்தான் அருளிலர்போல்
துவளத் தலைவந்த இன்னலின் னேயினிச் சொல்லுவனே. 51
கொளு
ஓரிடத்தவரை ஒருங்கு கண்டுதன்
பேரிடர் பெருந்தகை பேசத் துணிந்தது.
3. வேழம் வினாதல்
இருங்களி யாய்இன்(று) யான்சிறு மாப்பஇன் பம்பணிவோர்
மருங்(கு)அளி யாஅனல் ஆடவல் லோன்தில்லை யான்மலையீங்(கு)
ஒருங்(கு)அளி யார்ப்ப உமிழ்மும் மதத்(து)இரு கோட்(டு)ஒருநீள்
கருக்களி யார்மத யானையுண் டோவரக் கண்டதுவே. 52
கொளு
ஏழையர் இருவரும் இருந்த செவ்வியுள்
வேழம் வினாஅய் வெற்பன் சென்றது.
4. கலைமான் வினாதல்
கருங்கண் ணனையறி யாமைநின் றோன்தில்லைக் கார்ப்பொழில்வாய்
வருங்கள் நனையவண் டாடும் வளரிள வல்லியன்னீர்
இருங்கண் அனைய கணைபொரு புண்புண ரிப்புனத்தின்
மருங்கண் அனையதுண் டோவந்த(து) ஈங்கொரு வான்கலையே 53
கொளு
சிலைமான் அண்ணல் கலைமான் வினாயது.
5. வழி வினாதல்
சிலம்பணி கொண்டசேர் சீறடி பங்கன்தன் சீரடியார்
குலம்பணி கொள்ள எனைக்கொடுத் தோன்கொண்டு தான்அணியும்
கலம்பணி கொண்டிடம் அம்பலம் கொண்டவன் கார்க்கயிலைச்
சிலம்பணி கொண்டநும் சீறூர்க்(கு) உரைமின்கள் செல்நெறியே. 54
கொளு
கலைமான் வினாய கருத்து வேறறிய
மலைமான் அண்ணல் வழிவி னாயது.
6. பதி வினாதல்
ஒருங்(கு)அட மூவெயில் ஒற்றைக் கணைகொள்சிற் றம்பலவன்
கருங்கடம் மூன்றுகு நால்வாய்க் கரியுரித் தோன்கயிலை
இரும்கடம் மூடும் பொழில்எழில் கொம்பர்அன் னீர்களின்னே
வருங்கள்தம் ஊர்பகர்ந் தால்பழி யோஇங்கு வாழ்பவர்க்கு. 55
கொளு
பதியடு பிறவினாய் மொழிபல மொழிந்து
மதியுடம் படுக்க மன்னன் வலித்தது.
7. பெயர் வினாதல்
தாரென்ன வோங்கும் சடைமுடி மேல்தனித் திங்கள்வைத்த
காரென்ன ஆரும் கறைமிடற்(று) அம்பல வன்கயிலை
ஊரென்ன என்னவும் வாய்திற வீர்ஒழி வீர்பழியேல்
பேரென்ன வோஉரை யீர்விரை யீர்ங்குழற் பேதையரே. 56
கொளு
பேரமைத் தோளியர் பேர்வி னாயது.
8. மொழி பெறாது கூறல்
இரதம் உடைய நடம்ஆட்(டு) உடையவர் எம்முடையர்
வரதம் உடைய அணிதில்லை அன்னவர் இப்புனத்தார்
விரதம் உடையர் விருந்தொடு பேச்சின்மை மீட்டதன்றேல்
சரத முடையர் மணிவாய் திறக்கில் சலக்கென்பவே. 57
கொளு
தேமொ ழியவர் வாய்மொழி பெறாது
மட்டவிழ் தாரோன் கட்டு ரைத்தது.
9. கருத்தறிவித்தல்
வின்னிற வாணுதல் வேல்நிறக் கண்மெல் லியலைமல்லல்
தன்னிறம் ஒன்றில் இருத்திநின் றோன்தன(து) அம்பலம்போல்
மின்னிற நுண்ணிடைப் பேரெழில் வெண்ணகைப் பைந்தொடியீர்
பொன்னிற அல்குலுக்(கு) ஆமோ மணிநிறப் பூந்தழையே. 58
கொளு
உரைத்தது உரையாது கருத்தறி வித்தது.
10. இடை வினாதல்
கலைக்கீழ் அகல்அல்குல் பாரம(து) ஆரம்கண் ஆர்ந்(து)இலங்கு
முலைக்கீழ்ச் சிறிதின்றி நிற்றல்முற் றா(து)அன்(று) இலங்கையர்கோன்
மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம் பலவர்வண் பூங்கயிலைச்
சிலைக்கீழ்க் கணையன்ன கண்ணீர் எதுநுங்கள் சிற்றிடையே. 59
கொளு
வழிபதி பிறவினாய் மொழிபல மொழிந்தது.
மதியுடம்படுத்தல் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment